கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் எந்த நேரத்தில் செயல்படத் தொடங்கும் என அணுசக்தி கழக ஆலோசகர் சிதம்பரம் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.எஸ்.ஐ. நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி கழக முதன்மை விஞ்ஞான ஆலோசகர் ஆர்.சிதம்பரம் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையத்தின் முதல்நிலையின் அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளன.
இந்த அணுமின் நிலையம் தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் முழுதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்து உள்ளது. இதனால் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையம் எந்த நேரத்திலும் தனது மின் உற்பத்தியை தொடங்கும் நிலையில் உள்ளது.
அணுமின் நிலையம் பாதுகாப்பற்றது என்று பொதுவான கருத்து உள்ளது. நாம் கடந்த 1974-ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றி கண்டோம். இந்த சோதனை மூலம் அணுசக்தியில் இந்திய முழு பாதுகாப்பான நிலையை கொண்டு உள்ளது என உறுதி செய்து உள்ளோம்.
ஆனால் சாதாரண மக்களுக்கு அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு புரியவைப்பதில் பிரச்சினை உள்ளது. நமது அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானது. எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் அமைந்து உள்ளன. இதனால் தான் அதற்கு அணுசக்திகழகம் அனுமதி கொடுத்து உள்ளது.
உலகம் முழுவதும் 66 அணுசக்தி மின் நிலையங்களின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் 7 அணுமின்சக்தி நிலையங்கள் செயல்பாட்டுக்கு வர பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா அணுசக்தியில் முழுமையான பாதுகாப்பு வசதியை கொண்டு உள்ளது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இயற்கை பேரிடர்களால் இந்திய அணுசக்தி நிலையங்கள் பாதிக்கப்படும் என்பதை திட்டவட்டமாக மறுக்கிறேன்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.