கொழும்பு: பிரிட்டன் ஏர்வேஸ் விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது குடிபோதையில் விமான கதவை திறக்க முயன்ற இலங்கை கிரிக்கெட் வீரர் அந்நாட்டு அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் மகன் என தெரியவந்துள்ளது. பிரிட்டன் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது 35 ஆயிரம் அடி உயரத்தில் திடீரென இலங்கை வீரர் ஒருவர் விமானத்தின் கதவை குடிபோதையில் திறக்க முயன்றார். பின்னர் அவரை சக வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பணியாளர்களும் அவரை கட்டுப்படுத்தி உட்கார வைத்தனர். இந்நிலையில் அந்த இலங்கை வீரரின் பெயரின் ரமித் ரம்புக்வெல என தெரியவந்துள்ளது. இவர் இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் மகன் ஆவார். இதே ரமித் ரம்புக்வெல கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது குடிபோதையில் பால்கனியில் இருந்து கீழே விழுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரிட்டன் ஏர்வேஸ் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல இது சின்ன விஷயம் என்று அந்த விமான நிறுவனமே கூறிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார்.