மதுரை : “”என்னுடன் போட்டோ எடுத்து கொள்பவர்கள் ரூ.500 நன்கொடை வழங்க வேண்டும்,” என, தி.மு.க., இளைஞரணி அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடந்த கல்வி நிதியளிப்பு விழாவில், பங்கேற்ற அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கண்டிஷன் போட்டார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிதியளிப்பு விழா, மதுரையில் நேற்று நடந்தது.
பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.,வில் பல துணை அமைப்புகள் இருக்கின்றன. எனினும் இளைஞரணி அறக்கட்டளை மூலம், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி நிதியளிப்பு விழாவில் நான் பங்கேற்பது, மன நிம்மதியை தருகிறது. அறக்கட்டளை நிதியை, வங்கியில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டி கல்விக்காக வழங்கப்படுகிறது. 2008 முதல் 2011 வரை, 1646 பேருக்கு, 97 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. 2012-13 ல், மட்டும் 1682 பேருக்கு, ஒரு கோடி 53 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டில், மாணவர்கள் அதிக வெற்றிக்கு காரணம், சமச்சீர் கல்வி திட்டம் தான்.அடுத்தாண்டு, எண்ணிக்கை அதிகமாகும். எனவே, கல்வி நிதியளிப்புக்காக வட்டிப்பணம் போதாமல், டெபாசிட் தொகையை பெறும் நிலை உள்ளது. எனவே கல்வி நிதியை திரட்டும் வகையில், என்னுடன் போட்டோ எடுத்து கொள்பவர்கள், 500, 300, 100 ரூபாய் என வழங்க வேண்டும். இத்தொகை அறக்கட்டளை நிதியில் சேர்க்கப்படும், என்றார்.
பின், 1682 மாணவர்களுக்கு ஸ்டாலின், நிதி வழங்கினார். நன்கொடை கொடுத்த மாணவர்களுக்கு, ஸ்டாலினுடன் எடுத்துக் கொண்ட போட்டோ வழங்கப்பட்டது.