இந்தியாவின் மிக்பெரும் பிரச்சனை என்னவென்றால் வேலை இல்லாத் திண்டாட்டம் தான். ஆம், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காகியிருக்கிறது. 2006-07ம் ஆண்டு இந்தியா முழுவதும் 1,511 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 5.5 லட்சம் எஞ்சினியர்கள் பட்டம் பெற்று வெளி வந்தார்கள். $110 பில்லியன் (ரூ 6 லட்சம் கோடி) மதிப்பிலான ஐடி துறைக்கு லட்சோப லட்சம் எஞ்சினியர்கள் தேவை என்ற நோக்கத்தில் கல்லூரிகள் புற்றீசலாக பெருகியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு 3000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்திருக்கிறார்கள். உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ஐடி துறையிலும் உற்பத்தித் துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் சில ஆயிரக்கணக்கான இடங்களுக்கு பல லட்சம் பட்டதாரிகள் போட்டி போடுகின்றனர். வளாக நேர்முகங்கள் (கேம்பஸ் இன்டர்வியூ) பெருமளவு குறைந்திருக்கின்றன. வழக்கமாக 100-க்கு 100 மாணவர்களுக்கு வேலை கிடைத்து விடும் ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்களிலேயே பல மாணவர்கள் வேலை இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள். 2012-13 கல்வி ஆண்டில் மும்பை ஐஐடியில் கல்லூரி வளாக நேர்முகத்தில் கலந்து கொண்ட 1,501 மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு நான்கில் ஒரு பகுதியினருக்கு வேலை கிடைக்கவில்லை. ஐடி நிறுவனங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையை காட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த போது, பொறியியலில் எந்த பிரிவாயிருந்தாலும் மாணவர்களை ஆயிரக்கணக்கில் வேலைக்கு எடுத்துக் கொண்டு போனார்கள். அந்த நிலை மாறி, இப்போது பல கல்லூரிகளில் வடிகட்டும் தேர்வுகளை நடத்தி அதில் தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு மட்டும்தான் நேர்முகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மொத்த மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அமிட்டி கல்லூரியின் டில்லி வளாகத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு எண்ணிக்கையில் 40 சதவீதம் ஆக குறைந்திருக்கிறது. வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது. சேரும் தேதி கேட்டு போராட்டம்.