“எந்தப் பணியிலும் சாதிக்கலாம்’: ரயில்வே இன்ஜின் டிரைவர் தீப்தி உறுதி

“எந்தப் பணியிலும் சாதிக்கலாம்’: ரயில்வே இன்ஜின் டிரைவர் தீப்தி உறுதி

மதுரை :ஆண்களுக்கு, பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார், மதுரையில் ரயில் இன்ஜின் டிரைவராக (உதவி லோகோ பைலட்) நியமிக்கப்பட்டுள்ள தீப்தி, 26. “”எந்தப் பணியையும், ஆர்வமுடன் செய்தால் சாதிக்கலாம்,” என்கிறார்.

நவீன தொழில் நுட்ப உலகில், பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். சைக்கிள் முதல் சகல வாகனங்களையும் ஓட்டி சாதனை படைக்கின்றனர். கடின பணியாக கருதப்படும், ரயில்வே இன்ஜின் டிரைவராக பணியை துவக்கியிருக்கிறார், திருவனந்தபுரம் தீப்தி.அப்பா பாலகிருஷ்ணன், இறந்து விட்டார். அம்மா அம்பிகா குடும்பத் தலைவி. சகோதரி தீபா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தீப்தி, 2009ல் எலக்ட்ரிக்கல்லில் டிப்ளமோ பெற்றார். சென்னையில் வேலை தேடிய நிலையில், ரயில்வே தேர்வாணையம் லோகோ பைலட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. சிறிய வயதிலிருந்து, ரயில் பயணத்தில் உற்சாகம் கொண்ட தீப்தி, ரயில்வே தேர்வில் வெற்றி பெற்று, 2012ல் லோகோ பைலட் பயிற்சி பெற்றார். ஜூலை 4 முதல் மதுரை கோட்டத்தில், பாசஞ்சர் ரயிலில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று திண்டுக்கல்-மதுரை ரயிலை, பைலட் வினோத்குமாருடன் இணைந்து, தீப்தி ஓட்டி வந்தார். மதுரை ஸ்டேஷனில் நின்ற பெண் பயணிகள், அவருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.””எந்த பணியையும் ஆர்வம், உற்சாகத்துடன் திட்டமிட்டு செய்தால், சாதிக்கலாம். இரவில் ரயில் ஓட்டுவது, பிரச்னையாக தோன்றவில்லை. ரயிலை ஓட்டும் போது, பயணிகளின் பாதுகாப்பு தான் மனதில் தோன்றுகிறது. அதை வைத்து, கவனம் செலுத்துவதால், பணி கடினமாக தெரியவில்லை,” என்கிறார் தீப்தி. இவரை வாழ்த்த 86810 28212.

மூன்றாம் நபர்:

மதுரை ரயில்வே கோட்டத்தில் ஏற்கனவே சாந்தி, பெல்ஷியா ஆகியோர் இன்ஜின் டிரைவர்களாக பணிபுரிந்துள்ளனர். தற்போது அவர்கள் அலுவலக பணியில் உள்ளனர். தீப்தி, மூன்றாவது நபர். “இவர் ரயில்களை நேர்த்தியாக இயக்குவதாக,’ சக ஊழியர்கள், குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook