புதுடில்லி:உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கான அவசர சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஓப்புதல் அளித்தது. ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தபின், இந்த சட்டம் அமலுக்கு வரும்.
காங்., தலைவர், சோனியாவின் கனவு திட்டங்களில், உணவு பாதுகாப்பு மசோதாவும் ஒன்று. “அடுத்தாண்டு மத்தியில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்றினால், பிரசாரத்தின்போது, அதை, தங்களின் சாதனையாக கூறலாம்’ என, காங்., தலைவர்கள் கருதுகின்றனர்.இதனால், லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முயற்சித்தது. நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரங்களை எழுப்பி, எதிர்க்கட்சியினர், பார்லிமென்டில் அமளியில் ஈடுபடுவதால், உணவு பாதுகாப்பு மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற முடியாத வகையில், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.இதையடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு, பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டலாமா என, அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு கூட்டத் தொடரை, கூட்ட முடியவில்லை என்றால், அவசர சட்டத்தின் மூலம், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றலாம் என, அரசு முடிவு செய்தது.இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, உணவு பாதுகாப்பு மசோதாவை அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்ற, அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, அவசரம் சட்டம் தொடர்பான அறிக்கை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம், நாளை அளிக்கப்படுகிறது. இதில், ஜனாதிபதி கையெழுத்திட்ட பின், உணவு பாதுகாப்பு மசோதா அமலுக்கு வரும்.
மசோதா : ஏழை மக்களின் உணவுக்கு உத்தரவாதம் வழங்கும் திட்டத்தை, உலகில் ஒரு சில நாடுகளே நடைமுறைப் படுத்தியுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் சேரவுள்ளது. ஏழை மக்கள் பயன் அடையும் வகையில், மாதம் தோறும், நபர் ஒன்றுக்கு, 5 கிலோ உணவுப் பொருட்களை, ஒரு ரூபாய் முதல், 3 ரூபாய் வரையிலான விலையில், ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதே, இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.நாட்டில் உள்ள, 67 சதவீத மக்களுக்கு, இதன் மூலம், உணவு பாதுகாப்பு கிடைக்கும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இந்த திட்டம், நடைமுறைப் படுத்தப்பட்டால், உலகிலேயே, அதிக மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிக்கும் பிரமாண்ட திட்டமாக இருக்கும்.இதற்கிடையே, “விவாதத்தை தவிர்க்கும் வகையில், பார்லிமென்டில் நிறைவேற்றாமல், அவசர சட்டத்தின் மூலம், உணவு பாதுகாப்பு மசோதாவை, மத்திய அரசு நிறைவேற்றுகிறது’ என, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.