இளவரசன் மரணத்தை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் – பாஜக

இளவரசன் மரணத்தை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் – பாஜக

சென்னை: இளவரசன் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுவதால் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கலப்பு காதல் திருமணமும் அதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களும் நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டவர்கள் பிரிந்ததோடு இளவரசனின் மரண செய்தி மீண்டும் தமிழக மக்களிடையே அதிர்ச்சி அலையை உருவாக்கி உள்ளது. இளவரசன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கருதுவதில் தவறு இருக்க முடியாது. பிரச்சினைக்கு காரணமான திவ்யா தாயுடன் சென்றதோடு அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்ததாக அனைத்து தரப்பினரும் நம்பினார்கள். இந்த நிலையில் சாதிகள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க துடிக்கும் சிலரது சதிச் செயலாக இருக்கும் என்ற சந்தேகத்தையும் புறந்தள்ள முடியாது. எனவே மரணத்தை ஒரு சாதியோடு ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. எனவே சந்தேகத்துக்கு இடமில்லாமல் இளவரசன் மரணம் குறித்து பாரபட்சமற்ற முறையில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். குழப்பத்தில் உள்ள மக்கள் மத்தியில் தெளிவை உருவாக்கவும், சமூக ஒற்றுமையை பேணி காக்கவும் அனைத்து சமுதாய தலைவர்களை ஒருங்கிணைத்து நிரந்தர தீர்வு காண சமுதாய தலைவர்களும், ஆன்மீக மடாதிபதிகளும், தமிழக அரசும் முன்வர வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook