புனே: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்தது. நேற்று நடந்த பெண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்று சாதித்தது. இந்தியாவின் ஆஷா ராய் (200 மீ., ஓட்டம்), ரஞ்சித் மகேஸ்வரி (டிரிபிள் ஜம்ப்), ஜிதின் தாமஸ் (உயரம் தாண்டுதல்) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். நேற்றைய கடைசி நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உட்பட மொத்தம் 8 பதக்கங்கள் கிடைத்தன.
புனேயில், 20வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் 43 நாடுகளை சேர்ந்த 577 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்தில், இந்தியா சார்பில் பங்கேற்ற நிர்மலா, அனு மரியம் ஜோஸ், பூவம்மா, டிண்டு லூகா ஆகியோர் பந்தய தூரத்தை 3 நிமிடம், 32.26 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தனர். இதன்மூலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி வீராங்கனைகள், அடுத்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் (ஆக., 10-18) தொடருக்கு தகுதி பெற்றனர். வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை முறையே சீனா (3 நிமிடம், 35.31 வினாடி), ஜப்பான் (3 நிமிடம், 35.72 வினாடி) அணி வீராங்கனைகள் வென்றனர்.
ஆண்களுக்கான 4*400 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தேவிந்தர் சிங், குன்ஹி முகமது, சச்சின் ராபி, ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் 4வது இடம் (3 நிமிடம், 06.01 வினாடி) பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர். முதல் மூன்று இடங்களை சவுதி அரேபியா, ஜப்பான், இலங்கை அணி வீரர்கள் வென்றனர்.
200 மீ., ஓட்டம்:
பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில், பந்தய தூரத்தை 23.71 வினாடியில் கடந்த இந்தியாவின் ஆஷா ராய் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை துதீ சந்து (23.82 வினாடி) மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். முதலிடம் பிடித்த கஜகஸ்தானின் விக்டோரியா ஜியாப்கினா (23.62 வினாடி) தங்கம் வென்றார். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ராபானி நந்தா(24.38 வினாடி) 7வது இடம் பிடித்தார். ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலுக்கு ஒரு இந்திய வீரர் கூட தகுதி பெறவில்லை.
டிரிபிள் ஜம்ப்:
ஆண்களுக்கான “டிரிபிள் ஜம்ப்’ பைனலில், இந்தியா சார்பில் பங்கேற்ற ரஞ்சித் மகேஸ்வரி 16.76 மீ., தூரம் தாண்டி, இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் 16.58 மீ., தூரம் தாண்டிய மற்றொரு இந்திய வீரர் அர்பிந்தர் சிங் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். முதலிடத்தை சீனாவின் கயோ ஷுவோ (16.77 மீ.,) கைப்பற்றினார்.
400 மீ., ஓட்டம்:
ஆண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், பந்தய தூரத்தை 50.35 வினாடியில் கடந்த இந்தியாவின் சதிந்தர் சிங் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். முதலிரண்டு இடங்களை ஜப்பானின் யாசுஹிரோ புகி (49.86 வினாடி), சீனாவின் செங் வென் (50.07 வினாடி) ஆகியோர் கைப்பற்றினர்.
பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் இளவரசி 6வது இடம் பிடித்தார். இப்போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை ஜப்பானின் சடோமி குபோகுரா (56.82 வினாடி), மனாமி கிரா (57.78 வினாடி). வெண்கலப் பதக்கத்தை தென் கொரியாவின் ஜோ இன்-ஜு (58.21 வினாடி) தட்டிச் சென்றார்.
800 மீ., ஓட்டம்:
பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில், பந்தய தூரத்தை 2 நிமிடம், 04.48 வினாடியில் கடந்த இந்தியாவின் டிண்டு லூகா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை முறையே சீனாவின் சுன்யு வாங் (2 நிமிடம், 02.47 வினாடி), பக்ரைனின் ரிகசா ஜென்ஜப் ஷுமி (2 நிமிடம், 04.16 வினாடி) ஆகியோர் கைப்பற்றினர். இப்போட்டியில் பங்கேற்ற மற்ற இந்திய வீராங்கனைகளான சுஷ்மா தேவி, கோமதி முறையே 6, 7வது இடத்தை கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் மன்ஜித் சிங் (ஒரு நிமிடம், 49.70 வினாடி), 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். முதல் மூன்று இடங்களை கத்தாரின் முசாப் பல்லா (ஒரு நிமிடம், 46.92 வினாடி), சவுதி அரேபியாவின் அப்துல்லாஜிஸ் லடான் முகமது (ஒரு நிமிடம், 47.01 வினாடி), பக்ரைனின் பிலால் மன்சோர் அலி (ஒரு நிமிடம், 48.56 வினாடி) ஆகியோர் பிடித்தனர்.
5000 மீ., ஓட்டம்:
பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் பிரிஜா ஸ்ரீதரன், ஜெய்ஷா ஆகியோர் முறையே 7வது, 8வது இடம் பிடித்து ஏமாற்றினர். இதேபோல ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் லட்சுமணன் 4வது, நிதேந்தர் சிங் 5வது, முகமது யூனஸ் 7வது இடத்தை பிடித்தனர்.
உயரம் தாண்டுதல்:
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜிதின் தாமஸ் 2.21 மீ., தூரம் தாண்டி இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதே அளவு தாண்டிய ஈரான் வீரர் கெய்வான் கான்பார்ஜாதேக்கிற்கும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. சீனாவின் பை ஜியோலியாங் தங்கம் வென்றார்.
ஆறாவது இடம்:
நேற்று ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 8 பதக்கங்கள் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் மொத்தம் 17 பதக்கங்களுடன் (2 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம்) 6வது இடம் பிடித்தது. முதல் ஐந்து இடங்களை சீனா (16 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம்), பக்ரைன் (5 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்), ஜப்பான் (4 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம்), சவுதி அரேபியா (4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்), உஸ்பெகிஸ்தான் (3 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம்) நாடுகள் பிடித்தன.
நிறைவு விழா:
போட்டிகள் முடிந்த பின், நிறைவு விழா நிகழ்ச்சிகள் வண்ணமயமாக நடந்தது. இதில் பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரியம் மிக்க நடன நிகழ்ச்சிகள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
உலக தொடருக்கு தகுதி
நேற்று 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற நிர்மலா, அனு மரியம் ஜோஸ், பூவம்மா, டிண்டு லூகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, அடுத்த மாதம் (ஆக., 10-18) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றது.