கோவை:கோவையிலுள்ள “அம்மா’ உணவகங்களில், எவர் சில்வர் தட்டு, டம்ளர் திருட்டு போவதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்
படுகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில், “அம்மா உணவகம்’ திறக்கப்பட்டுள்ளது.உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காலையில் 300 பேர் சாப்பிடும் வகையில் 1,200 இட்லியும், மதியம் சாம்பார் சாதம் 300 பேருக்கும், தயிர் சாதம் 300 பேருக்கும் தயாரிக்கப்படுகிறது.
உணவு வகைகள் தயாரிப்புக்கு 1.62 கோடி ரூபாய் செலவாகும்; உணவு வகைளை விற்பனை செய்வதன் மூலம் 65.71 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்; வித்தியாச தொகை 95.95 லட்சம் ரூபாய், மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அம்மா உணவக கட்டட வசதி ஏற்படுத்தவும், சமையல் பாத்திரங்கள், மின் உபகரணங்களுக்கும் 1.30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. குறிச்சி, மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட் ஆகிய மூன்று உணவகத்தில், ஏழு லட்சம் ரூபாய் செலவில், தலா 2 கே.வி.ஏ., சோலார் மின் உற்பத்தி பேனல் அமைக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் ரசீதுக்கு பதிலாக, ஏழு லட்சம் ரூபாய் செலவில், “இ-டோக்கன்’ முறை கொண்டு வரப்படுகிறது. சோலார் மின்சக்தி முறையும், இ-டோக்கன் முறையும் தமிழகத்தில் கோவையில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.
உயர்தர ஓட்டல்களை போன்று, எவர் சில்வர் தட்டு, டம்ளர் போன்றவை. அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டுள்ளன. காலை, மதியம் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, “பபே’ முறையில் உணவு சாப்பிடுவர்.
சாப்பிட்ட பின், எவர்சில்வர் தட்டு, டம்ளர்களை “அபேஸ்’ செய்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாநகராட்சி அதிகாரிகள், அம்மா உணவகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர்.
15 தட்டு, 8 டம்ளர் மாயம்
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “உணவகத்தில், அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், மிளகாய், புளி, மஞ்சள்தூள், பொட்டுக்கடலை, கடுகு, வெந்தயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தினமும் 600 ரூபாய்க்கு காய்கறி, தேங்காய், தக்காளி, வெங்காயம் வாங்கப்படுகிறது. இருப்பு வைக்கும் உணவுப்பொருட்களில் முறைகேடு நடக்கக்கூடாது. மேலும், ஏழு உணவகங்களில் எவர்சில்வர் தட்டு, டம்ளர் காணாமல் போயுள்ளது. இதுவரை 15 தட்டு, எட்டு டம்ளர் திருட்டு போயுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைக்காக, உணவகத்தில் உள்ளே, வெளியே என இரண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. அனைத்து கேமராவும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இணைக்கப்படும். இதற்காக இரண்டு லட்சம் ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.