அன்பு காட்ட யாருமே இல்லையா

அன்பு காட்ட யாருமே இல்லையா

பிறவியில் அல்லது இடையில், ஏதோ ஒரு காரணத்திற்காக மனிதர்கள் மனநலம் பாதிக்கப்படுகிறது. சிலர் சாதாரண பிரச்னையை கூட, பூதாகரமாக கற்பனை செய்து, அதற்கு விடை தெரியாமல் தனக்குத்தானே அதிகப்படியாக சிந்தித்து மன உளைச்சலுக்கும், மனக்குழப்பத்திற்கும் ஆளாகி வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இவர்கள், மனநிலை தவறி, ஒரு கட்டத்தில் யாருக்கும் கட்டுப்படாமல் இயல்பு

வாழ்க்கையில் இருந்து வெளியேறி… வெளியுலகில் சுதந்திரமாக திரிய ஆரம்பித்து விடுகின்றனர்.நாம் யார்? என்ன செய்கிறோம்? நமது நிலை என்ன? நம்மை சுற்றி என்ன நடக்கிறது? என எதையும் யூகிக்க முடியாதபடி மனநலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இவர்களில், பெண்களின் நிலைமை படுமோசம். இவர்களின் சிகிச்சைக்கு உதவுவதற்கு பதிலாக, அவரை பாலியல் கொடுமைக்கு சிலர் உட்படுத்துகின்றனர். இதனால், தனக்கே தெரியாமல் நடந்த தவறுக்காக கர்ப்பிணியாகும் கொடுமையும், அந்த அப்பாவி பெண்களுக்கு நேரிடுகிறது. இவர்களுக்கு ரோட்டிலேயே குழந்தை பிறந்த அவலமும் நடந்தது தான் கொடுமையிலும் கொடுமை. மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அழுக்கேறிய அரைகுறை ஆடை, பரட்டை தலை, நீண்ட தாடியுடன் ரோட்டில் திரிகின்றனர். குப்பை தொட்டியில் கிடைக்கும் உணவினை உண்டு பரிதாப வாழ்க்கையை நகர்த்துகின்றனர். மனநலம் பாதித்த முதியோர்களை சிலர் கவனிக்க மனமின்றி… காரில் ஏற்றி வந்து புறநகரில் இறக்கிவிட்டு தப்பியோடி விடுகின்றனர். மனநலம் பாதித்தவர்களும் நம்மை போல் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அன்பு காட்டி அரவணைக்கவும் முன்வரவேண்டும். சில தனியார் தொண்டு நிறுவனங்கள், மனநலம் பாதித்தவர்களுக்கு உதவுகின்றன. இவர்களை மனநல காப்பகங்களில் அனுமதித்து, தொடர் சிகிச்சை அளிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரும், மனநலம் பாதித்து, மதுரை தெருக்களில் அலைவோர் மீது அன்பு காட்டி, நல்வழிப்படுத்தும் முயற்சியை துவக்க வேண்டும்.

ஐகோர்ட் சொல்வது என்ன:

“மனநலச் சட்டம் 1987ன் கீழ், மனநலம் குன்றியவர்களை பாதுகாக்க அரசு அதிகாரிகள், போலீசார் தவறும் பட்சத்தில், வழக்கு தாக்கல் செய்து தகுந்த நிவாரணம் கோரலாம்,’ என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையில் மனநலம் சரியில்லாத 200 பேர் ஆங்காங்கு திரிகின்றனர். அவர்கள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். மனநலச்சட்டத்தின் கீழ் அவர்களை பாதுகாக்க அரசு செயலாளர், போலீஸ் கமிஷனர் தவறியதாக மதுரை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல் எஸ்.முத்துக்குமார் ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். 1987 மனநல சட்டப்பிரிவு 25(1)(ஏ)ன்படி அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திரியும் மனநலம் குன்றியவர்கள் பிடிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின் சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் 12 பேர் மீட்கப்பட்டதாக, போலீஸ் தரப்பில் பதில் மனு செய்யப்பட்டது.இவற்றை பரிசீலித்த நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், ஆர்.சுப்பையா கொண்ட பெஞ்ச், 4.3.2011ல் பிறப்பித்த உத்தரவு: மனநலச் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து போலீசார் விலகுவது தெரியும் பட்சத்தில், ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்து, நடவடிக்கை கோரலாம், என குறிப்பிட்டது.மனநலச் சட்டம் பிரிவு 23(1)ன்படி மனநலம் குன்றியவர்களை பாதுகாக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரிகளுக்கு உண்டு. சம்பந்தப்பட்ட மனநலம் குன்றியவர்களை மீட்டு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தகுந்த சிகிச்சை பெற வைக்க வேண்டும் என சட்டப்பிரிவு 24 வலியுறுத்துகிறது. ஐ.நா., சபை 1948 டிச., 10ல் மனித உரிமை மீறல் குறித்த உத்தரவில், அனைவரும் சட்டத்தின் முன் சமம் மற்றும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு பெற உரிமையுண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டு முயற்சி தேவை:

ஹேமா, குடும்ப தலைவி, கே.கே.நகர்: சாலையில் செல்லும்போது மனநலம் பாதித்த சிலர் கிழிந்த அரைகுறை ஆடையுடன் செல்வதை பார்க்கும்போது மனம் வெதும்பும். நம்மாலும் நிச்சயம் உதவிட முடியும், என்ற எண்ணம் தோன்றும். இப்படி பலமுறை பலருக்கு உதவியுள்ளேன். உடனடியாக மனநல மருத்துவரிடம் கூறி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன். நமக்கேன் வீண் வம்பு, என நினைப்பது தவறு. மனநலம் பாதித்தவர்களை பயன்படுத்தி சிலர் பிச்சை எடுக்க வைக்கின்றனர். இவர்களுக்கு, சட்டப்படி கடும் தண்டனை வழங்க வேண்டும். மனநலம் பாதித்தவர்களை மீட்க கூட்டு முயற்சி அவசியம்.

உதவும் மனம் வேண்டும்:

பாலமுருகபாண்டியன், ஆசிரியர், தெத்தூர்: சாலையில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம், காசு, சாப்பாடு கொடுத்து உதவுவதை காட்டிலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். போலீசார் உதவியுடன் மீட்டு, முறைப்படி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வட மாநிலங்களில் இருந்து மதுரை வருவோர் அதிகம்:

எடிசன் (நிர்வாகி, இம்மானுவேல் சேரிட்டபிள் டிரஸ்ட், மதுரை ): ரோட்டோரங்களில் இருக்கும் ஆதரவற்றோரை, அவர்கள் விரும்பினால் மட்டும் நாங்கள் எங்கள் காப்பகங்களுக்கு அழைத்துச் சென்று, மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்கிறோம். மனச்சிதைவு, அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மனநோயாளியாக இருப்போருக்கு இந்நோயின் தாக்கம் 30 சதவீதத்திற்குள் இருந்தால், அவர்களை எளிதாக குணப்படுத்தி விடலாம்.ஓய்வு, தூக்கம், அரவணைப்பு இருந்தாலே அவர்கள் சகஜநிலைக்கு வந்துவிடுவார்கள். வடமாநிலங்களில் இருந்து தான் அதிகம் பேர் மனநோயாளிகளாக மதுரையில் சுற்றிவருகிறார்கள். இவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரின் அனுமதியோடு தான் காப்பகங்களில் சேர்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook