சென்னை:”சவுதி அரேபியாவில், வேலை வாங்கி தருகிறோம்’ என, ஏமாற்றப்பட்ட, 11 இளைஞர்கள் தங்களை மோசடி செய்த, நிறுவன உரிமையாளர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை கமிஷ்னரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.
ஏமாற்றப்பட்டது குறித்து, இளைஞர்கள் கூறியதாவது:கடந்த, மார்ச் மாதம், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, “பைவ் ஸ்டார்’ என்ற நிறுவனம், “சவுதி அரேபியாவில் வெல்டிங் வேலை செய்ய ஆட்கள் தேவை’ என, விளம்பரம் செய்திருந்தது. விளம்பரத்தை பார்த்து, 10க்கும் மேற்பட்டோர், குறிப்பிட்ட நிறுவனத்தை அணுகினோம். நிறுவன அதிகாரிகள், “மாதம் 1,750 ரியாத் சம்பளம்; உணவு, இருப்பிடம் இலவசம்’ என கூறினர். இதனால், கடலூர், கல்பாக்கம், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து, 11 பேர், ஏப்., 25, 30 ஆகிய தேதிகளில், சவுதி சென்றோம்.எங்களுடன் வந்த, “பைவ் ஸ்டார்’ நிறுவன அதிகாரி ஒருவர், சவுதியில் ஜெட்டா பகுதியில் உள்ள, “அப்துல்லா பின் மெஸ்ட் கம்பெனி வெல்டர்’ என்ற கம்பெனியில், எங்களை சேர்த்து விட்டார். அந்நிறுவன உரிமையாளர், எங்களின் செலவுக்காக, 100 ரியாத் அளித்தார். கம்பெனி இருக்கும் இடத்திலிருந்து, 100 மீட்டர் தொலைவில், தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பத்துக்கு பத்து அடி உள்ள அறையில், 11 பேர் தங்க வேண்டும் எனக் கூறினர். கால் நீட்டி படுக்க கூட முடியாது என்ற சூழ்நிலை இருந்த போதும், வீட்டின் வறுமைக்காக அனைவரும் சகித்துக் கொண்டோம்.
ஒரு வாரம் வரை, எங்களுக்கு எந்த வேலையும் தரவில்லை; கையில் வைத்திருந்த காசும் செலவாகியது. இதனால், நிறுவன உரிமையாளரிடம், “உடனே எங்களுக்கு வேலை வழங்க வேண்டும்’ என்றோம். ஆனால் அவர், “தற்போது வெல்டிங் வேலை எதுவும் இல்லை; கட்டுமான வேலை மட்டுமே உள்ளது’ என்றார்.”கட்டுமான வேலை எதுவும் எங்களுக்கு தெரியாது. எனவே, எந்த மாதிரியான வெல்டிங் வேலை கொடுத்தாலும் செய்கிறோம்’ என, கூறினோம். அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், “கட்டுமான வேலை செய்தால் மட்டுமே இங்கு இருக்க முடியும். இல்லை என்றால், அனைவரின் கண்ணை கட்டி, ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிடுவோம்’ என, மிரட்டினர்.நாங்கள் கேட்ட வேலை கிடைக்காது என தெரிந்தவுடன், சென்னையில் உள்ள, “பைவ் ஸ்டார்’ நிறுவன உரிமையாளர் இக்பாலிடம் முறையிட்டோம். அவர், “சவுதியில் உள்ளவர்கள் சொல்கிற வேலையை செய்யுங்கள்; இல்லை எனில், அங்கேயே, செத்து விடுங்கள்’ என்றார். திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டதை புரிந்து கொண்ட நாங்கள், சவுதி கம்பெனி உரிமையாளரிடம், “வெல்டிங் வேலை கொடுங்கள்’ என்றோம். உடனே, எங்கள் எல்லோரின் பாஸ்போர்ட்களையும், அவர் பிடுங்கிக் கொண்டார். அதுமட்டுமின்றி, வெளியில் எங்கும் செல்ல முடியாத வண்ணம், எங்களை வீட்டு சிறையில் அடைத்தார். கையில் காசில்லை; வெளியில் செல்லவும் முடியவில்லை.
இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், இரண்டு மாதம் அங்கே இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஜெட்டா பகுதியில், 200 க்கும் மேற்பட்ட தமிழர், வசித்து வந்தனர். அவர்களிடம் எங்கள் நிலைமையை கூறினோம்.அவர்களால், முடிந்த சிறு உதவிகளை செய்து, எங்களை காப்பாற்றினர். வெப்பநிலை அதிகமாக இருந்ததால், எங்கள் உடல்நிலை சரியில்லாமல் போனது; டாக்டரிடம் அழைத்து செல்வதற்கு கூட, காசின்றி தவித்து வந்தோம்.மீண்டும்,” பைவ் ஸ்டார்’ உரிமையாளர் இக்பாலிடம் எங்கள் நிலைமையை விளக்கி கூறினோம். அவர், “உங்களுக்கு தேவையான அனைத்து, உதவிகளையும் செய்கிறேன்; ஆனால், “வெளிநாடு செல்வதற்காக செலுத்திய பணத்தை, மீண்டும் கேட்க மாட்டேன்’ என, தாளில் கையெழுத்திட வேண்டும் ‘ என, கூறினார்.வேறுவழியின்றி நாங்களும் கையெழுத்திட்டோம். பின், ஜூன், 24, 26 ஆகிய தேதிகளில், மும்பை வர ஏற்பாடு செய்தார். ஆனால், மும்பையிலிருந்து சென்னை வருவதற்கு, ரயில் டிக்கெட் ஏற்பாடு செய்திருப்பதாக கூறி, டிக்கெட்டை ரத்து செய்து விட்டார்.
இதனால், அங்குள்ள தமிழர்களிடம் பிச்சை எடுத்து பணம் சேகரித்து, மும்பையிலிருந்து சென்னை வந்தோம். எங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும், மொத்தமாக, 10 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த, இக்பால் நிறுவனத்தின் மீதும், அவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.