சென்னை : பள்ளிகளில் சத்துணவை தலைமை ஆசிரியர் சாப்பிட்ட 30 நிமிடம் கழித்த பிறகுதான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பீகார் மற்றும் நெய்வேலி சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் சத்துணவை பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப் பாளர், சமையலர் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
பள்ளிகளில் சத்துணவு விநியோகிக்கும் முறையை தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதைத் தொடர் ந்து மாவட்ட கலெக்டர்கள் கல்வித் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
அதில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் சத்துணவு தயாரிக்கும் பணியை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். மேலும், சத்துணவை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் ஆகியோர் சாப்பிட வேண்டும். இவர்கள் சாப்பிட்டு அரை மணி நேரத்துக்கு பிறகு தான் மாணவிகளுக்கு வழங்க வேண்டும்.
இந்த விதிமுறையை கடைப்பிடிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவை அமைப்பா ளர் சாப்பிட்டு பார்த்த பிறகுதான் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இப்போது நெய்வேலி சம்பவத்துக்குப் பிறகு, இந்த உத்தரவை பள்ளி தலைமை ஆசிரியரும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.