தபால் அலுவலகங்களில், மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடம் வசூலிக்கும் கூடுதல் கட்டண தொகை, இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கூடுதல் கட்டண தொகையை, தபால் துறை உயர்த்தி உள்ளதாக, நுகர்வோர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், தற்போது, 2.44 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இவற்றில், வீட்டு மின் இணைப்புகள், 1.63 கோடி. மேலும், விவசாயம், வணிகம், தொழிற்சாலை மற்றும் இதர இனம் என, பல தரப்பட்ட மின் நுகர்வோர்களும் உள்ளனர்.இவர்களில், வீட்டு மின் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறை, கட்டணம் கணக்கிடப்படுகிறது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தை, மின் கட்டண சேவை மையங்கள் தவிர, பிற மையங்கள், சேவை வசதிகள் வாயிலாகவும் செலுத்தும் வசதியை, ஏற்படுத்தி உள்ளது. இதற்காக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பிற கட்டண சேவை வசதிகளாக, பணம் செலுத்தும் கணினி இயந்திரங்கள், இணைய தள வங்கி முறை (ஆன்-லைன்), வங்கி பண அட்டை (ஏ.டி.எம்.,), மொபைல் போன், தபால் அலுவலகம் ஆகியவை, இடம் பெற்றுள்ளன. இவற்றின் மூலமும், நுகர்வோர், மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.இச்சேவைகளில், இணைய தள வங்கி சேவை, தானியங்கி மின் கட்டண செலுத்தும் இயந்திரம் ஆகியவற்றிற்கு மட்டும், நுகர்வோரிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.தபால் அலுவலகம் மூலம், கட்டணம் செலுத்தும் சேவைக்கு, இதுவரை, வசூலிக்கப்பட்டகூடுதல் கட்டணம், இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, நுகர்வோர் கூறுகின்றனர்.