வாஷிங்டன்: சூரியனில் எப்படி வெப்பம் உருவாகிறது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, “நாசா’ பல்வேறு கிரகங்கள் குறித்து ஆய்வு செய்ய, விண்கலங்களை அனுப்பியுள்ளது. இந்த வகையில் தற்போது, சூரியனின் கீழ் பகுதியை பற்றி ஆராய, ஐ.ஆர்.ஐ.எஸ்.,வகையை சேர்ந்த செயற்கைக்கோளை, நேற்று முன்தினம், கலிபோர்னியாவிலிருந்து, பிகாசஸ் ராக்கெட் மூலம் ஏவியது. சூரியனை பற்றி ஆய்வு நடத்துவதற்காக, 1,100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ், இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் சூரியனை சுற்றி வந்து, அதில் வெளிவரும் துகள்கள், வெப்பம் உருவாகும் விதம், சூரியனிலிருந்து, பூமியை நோக்கி வரும் புற ஊதா கதிர்கள் உள்ளிட்டவை குறித்து, இந்த செயற்கைக்கோள் தகவல் தெரிவிக்க உள்ளது. “இந்த செயற்கைக்கோள் மூலம், சூரியனை பற்றி மேலும் பல அரிய தகவல்கள் வெளிவரும்’ என, நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.