சென்னையில் நடைபெற்ற பி.சி.சி.ஐ செயற்குழு கூட்டத்தில், சூதாட்டம் தொடர்பான விசாரணை முடியும் வரை பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீநிவாசன் ஒதுங்கியிருப்பது என்றும், பி.சி.சி.ஐ.யின் அன்றாட நடவடிக்கைகளை ஜக்மோகன் டால்மியா கவனிப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு, சூதாட்டப் புகாரில் தொடர்பிருப்பதாக கூறப்படுவதால், ஸ்ரீநிவாசன் பதவி விலக வேண்டும் என்ற குரலும் வலுப்பெற்றது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்ரீநிவாசன், தம் மீது எந்தத் தவறும் இல்லை என்பதால், பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியா, பி.சி.சி.ஐ.யின் நிர்வாக மற்றும் அன்றாடப் பணிகளை கவனிப்பார் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர் பேசிய டால்மியா, தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை, கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த பயன்படுத்துவேன் என்றார்.
பி.சி.சி.ஐ. வாரிய செயலாளர் பதவியில் இருந்து சஞ்சய் ஜக்தாலேவும் பொருளாளர் பதவியில் இருந்து அஜய் ஷிர்கேவும், மீண்டும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இணைவார்கள் என தாம் நம்புவதாகவும் டால்மியா செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால், டால்மியாவின் நியமனத்தால், ஐ.பி.எல். சூதாட்டப் புகார் நியாயமான முறையில் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கீர்த்தி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் தொடர்பாக, பி.சி.சி.ஐ. உறுப்பினர்கள் ஒருமித்த கருத்த எட்ட முடியாதது வருத்தத்திற்கு உரிய விஷயம் எனத் தெரிவித்துள்ள கீர்த்தி ஆசாத், இந்த விவகாரத்தில், கொள்ளைக் கும்பலைப் போல் பி.சி.சி.ஐ. உறுப்பினர்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
ஆதரவும், எதிர்ப்பும்..
பி.சி.சி.ஐ. நிர்வாகப் பணிகளை ஜக்மோகன் டால்மியா கவனிப்பார் என அதன் அவசர செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு, சிலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்புக் குரலும் வலுவாகவே இருக்கிறது.
பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீநிவாசன் ஒதுங்கியதால், விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என பாரதிய ஜனதா தலைவரும், பி.சி.சி.ஐ. துணைத் தலைவருமான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்காலிக தலைவராக ஜக்மோகன் டால்மியா நியமிக்கப்பட்டது சரியான முடிவுதான் என கோவா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அவசர செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் கண்துடைப்பு நாடகம் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பி.சி.சி.ஐ. வாரிய செயலாளர் பதவியில் இருந்து சஞ்சய் ஜக்தாலேவும் பொருளாளர் பதவியில் இருந்து அஜய் ஷிர்கேவும், தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ராஜினாமா முடிவை திரும்பப் பெறப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.