ஒரே நாளில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனையானது

ஒரே நாளில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனையானது

சென்னை: ஆபரண தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, ஒரே நாளில் மட்டும், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வீழ்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய விலை நிலவரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்து, பங்குச் சந்தை மற்றும் அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை, கடும் சரிவை கண்டு வருகிறது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,470 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,760 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கம் விலை, கிராமுக்கு, 91 ரூபாய் குறைந்து, 2,379 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 728 ரூபாய் சரிவடைந்து, 19,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 980 ரூபாய் வீழ்ச்சிகண்டு, 25,440 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 42.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 39,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்ற, 2011ம் ஆண்டு, நேற்றைய தேதியில், ஒரு கிராம், தங்கம், 2,072 ரூபாய்க்கும், ஒரு சவரன், 16,576 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டு, இதே தேதியில், ஒரு கிராம் தங்கம், 2,811 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,488 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, நடப்பாண்டுடன் ஒப்பிடும்   போது, தங்கம் விலை கிராமுக்கு, 432 ரூபாயும், சவரனுக்கு, 3,456 ரூபாயும் வீழ்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் நாணயம் விற்பனை நிறுத்தம்:

இதற்கிடையில், வரும், ஜூலைமுதல், நகை கடைகளில், தங்க நாணயம் மற்றும் தங்க கட்டி விற்பனையை நிறுத்த, வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர். நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிவடைந்து வருகிறது. நாட்டின் மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் பங்களிப்பு, 70 சதவீதமும், தங்கம் பங்களிப்பு, 20 சதவீதமும் உள்ளது. கடந்த, 2011ம் ஆண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 850 டன்னாகவும், சென்ற நிதியாண்டில், 800 டன்னாகவும் இருந்தது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, சுங்கவரி, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மொத்த தங்கம் இறக்குமதியில், 20 சதவீதம், தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகளாக, விற்பனை செய்யப்படுகின்றன. பொது மக்கள், தங்க நாணயம் மற்றும் தங்க கட்டிகளை, முதலீட்டு

நோக்கத்திற்காக மட்டுமே, வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, “தங்க நாணயம் விற்க வேண்டாம்’ என்று, வங்கிகளுக்கு, மத்திய அரசு, அண்மையில் தெரிவித்திருந்தது. தங்கம் பயன்பாட்டில், மும்பைக்கு அடுத்து, தமிழகம் உள்ளது. இங்கு, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகை நிறுவனங்கள் உள்ளன. இதில், 10 சதவீதம் மட்டுமே, அமைப்பு சார்ந்தவை. தமிழகத்தில் விற்பனையாகும், மொத்த தங்கத்தில், 70 சதவீதம், சென்னையில் விற்பனையாகிறது. சராசரியாக, ஒரு கிலோ தங்கம் விற்பனையில், 10 சதவீத பங்களிப்பை நாணயங்களும், தங்க கட்டிகளும் கொண்டுள்ளன. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தற்போது, வர்த்தகர்கள், தங்க நாணயம் மற்றும் தங்க கட்டி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து நகை கடைகளிலும், ஜூலை முதல் வாரத்தில் இருந்து, தங்க நாணயம் மற்றும் தங்க கட்டி விற்பனை இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook