ஸ்ரீபெரும்புதூர்:இருங்காட்டுகோட்டை சிப்காட் வளாகத்தில், 17 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும், 100 ஏக்கர் நிலத்தில், சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால், தினசரி ஒரு லட்சம் யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதன் மூலம், மின் தட்டுப்பாட்டால் திணறி வரும் தொழிற்சாலைகள் பயன் பெற முடியும்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, இருங்காட்டுகோட்டை சிப்காட் வளாகம், 1996ம் ஆண்டு, 1,810 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. இங்கு, 195 தொழிற்சாலை மனை பிரிவுகள் உள்ளன. இவை, மோட்டார் வாகன தயாரிப்புக்கு 115, தோல் பொருட்கள் தயாரிப்புக்கு 39, ஆயத்த ஆடை தயாரிப்புக்கு 41, என, மனை பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.தொழிற்சாலைகள்இவற்றில், மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் ஆயத்த ஆடைகள் பிரிவுக்கு என, ஒதுக்கப்பட்ட மனை பிரிவுகளில் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு, உற்பத்தி நடந்து வருகிறது. இந்த தொழிற்சாலைகளில், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால், மனை பிரிவு ஒதுக்கப்பட்ட நாள் முதல், இன்று வரை, 17 ஆண்டுகளாக, தோல் பொருட்கள் உற்பத்திக்கு என, ஒதுக்கப்பட்ட மனை பிரிவுகளில், தொழிற்சாலைகள் அமைக்கப் படவில்லை.இதனால், 39 மனை பிரிவுகள் அடங்கிய 100 ஏக்கர் நிலம், பயன்பாடின்றி வீணாக கிடக்கின்றன. இந்த நிலத்தை, வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதில் பல்வேறு விதிமுறை சிக்கல்கள் உள்ளன. தோல் பொருட்கள் தயாரிப்புக்கு என, ஒதுக்கப்பட்ட மனை பிரிவுகளை, மாற்று தொழில்களுக்கான மனை பிரிவுகளாக மாற்ற, சிப்காட் சார்பில், அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகியும் இதுவரை அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.1 லட்சம் யூனிட்இந்த நிலையில், வீணாக கிடக்கும் 100 ஏக்கர் பரப்பளவில், சூரியசக்தி மின்சார தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால், இருங்காட்டுகோட்டை சிப்காட் வளாகத்திற்கு தேவையான மின்சாரத்தில் ஒரு பகுதியை அது ஈடு செய்யும்.இது குறித்து, சூரியசக்தி மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில், “”ஐந்து ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மின் தகடுகள் (சோலார் பேனல்) பொருத்தப்பட்டால், ஒரு மணி நேரத்திற்கு 1000 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இந்த வகையில், நாள் ஒன்றுக்கு, 12 ஆயிரம் யூனிட் கிடைக்க வேண்டும். ஆனால், பருவநிலை, சேதாரம் போக நாள் ஒன்றுக்கு சராசரியாக 5,000 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதன்படி, 100 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டால், தினசரி, ஒரு லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி முடியும்,” என, கூறினார்.வரவேற்கக்கூடிய திட்டம்இது குறித்து, சிப்காட் வளாகத்தில் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் கேட்டபோது, “”இது வரவேற்கக்கூடிய திட்டம். மின் தட்டுப்பாட்டை சமாளிக்க இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரம் உதவும். அதே வேளையில், உற்பத்தியாகும் மின்சாரத்தை, சிறிது குறைவான விலையில் கொடுத்தால், தொழிற்சாலைகள் தங்களின் உற்பத்தி செலவை குறைக்க வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.