விமான தாக்குதல் ஒபாமா உறுதி

விமான தாக்குதல் ஒபாமா உறுதி

ஆளில்லா விமான தாக்குதல் அவசியம்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதி

வாஷிங்டன்:ஆளில்லா விமான தாக்குதல், அமெரிக்காவின் தற்காப்பு நடவடிக்கை. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய தாக்குதல், கடைசி முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகிறது. குவான்டனாமோ தனிமைச் சிறை, விரைவில் மூடப்படும்,” என, அமெரிக்க அதிபர், பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின், தேசிய பாதுகாப்பு பல்கலையில், அதிபர் ஒபாமா நேற்று ஆற்றிய உரை:அமெரிக்கா, இப்போதும், பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது. அதிகபட்சமாக எவ்வளவு அமெரிக்கர்களை கொல்ல முடியும் என யோசிக்கும், பயங்கரவாத இயக்கங்களை, அழித்து வருகிறோம். அவர்களை முன்னதாகவே தடுத்து நிறுத்தவில்லை என்றால், பாதிப்பு, அமெரிக்காவுக்குத் தான்.அதனால் தான், தற்காப்பு நடவடிக்கையாக, ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்துகிறோம். கூடுமான வரை, அப்பாவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான், அமெரிக்க ஆளில்லா விமானங்கள், தாக்குதல் நடத்துகின்றன. சில சமயங்களில், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்; அது, தவிர்க்க முடியாததாகி விடுகிறது.பொதுமக்கள் பாதிக்கப் படுவர் என்பதற்காக, எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. அல் – குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான், தாக்குதல் நடத்தப்படுகிறது. அதுபோல், பிற நாடுகளின் எல்லைக்குள், புகுந்து தாக்குதல் நடத்துவதை, அமெரிக்கா விரும்புவதில்லை. அதை கடைசி நடவடிக்கையாகத் தான் மேற்கொள்கிறோம். ஒசாமா பின் லாடன் போன்றவர்களை கொல்ல, அதுபோல் தான் செய்ய வேண்டியுள்ளது.
எங்களைப் பொறுத்த மட்டில், பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும், அவர்களைப் பிடித்து, கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருவது தான்
விருப்பம். அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலையில், ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்துகிறோம்; அதிரடி தாக்குதல்களை நடத்துகிறோம்.மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, பெரும்பாலும் தோல்வி அடைவதில்லை. அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்ட, சில அமெரிக்கர்கள் மீதும், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.பயங்கரவாதிகளை அடைத்து வைத்திருக்கும், குவான்டனாமோ தனிமைச் சிறையை மூடவே விரும்புகிறோம். அங்கு, இப்போது, 166 பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுஉள்ளனர்.இவ்வாறு ஒபாமா பேசினார்.அவர் பேசும் போது, பார்வையாளர் வரிசையில் இருந்த சிலர், ஆப்கன், பாகிஸ்தானில், அமெரிக்கா நடத்தும், ஆளில்லா விமான தாக்குதலுக்கு, எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை, போலீசார் அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook