திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நர்சிங் கல்லூரி மாணவியை கொல்ல முயன்ற கும்பல்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நர்சிங் கல்லூரி மாணவியை கொல்ல முயன்ற கும்பல்

பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் அன்னகாமு(17). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த கல்லூரியில் இந்த ஆண்டு மாணவிகள் சேர்க்கை தொடர்பாக அதே பகுதியில் படிக்கும் மாணவிகளையே கல்லூரி நிர்வாகத்தினர் பயன்படுத்தி உள்ளனர். அவ்வாறு மாணவி அன்னகாமு தினமும் மாணவிகள் சேர்க்கை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.

திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு மாணவியை அன்னகாமு சந்தித்து தான் படிக்கும் நர்சிங் கல்லூரி குறித்து விவரமாக எடுத்து கூறி எங்கள் கல்லூரியில் சேருங்கள். உங்கள் எதிர்காலம் பிரகாசமாகும் என கூறியுள்ளார். இதற்கிடையே அன்னகாமு சந்தித்து பேசி வைத்திருந்த அந்த மாணவி திண்டுக்கல்லில் இயங்கி வரும் மற்றொரு கேட்டரிங் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி அறிந்த அன்னகாமு சம்பந்தப்பட்ட கேட்டரிங் கல்லூரி நிர்வாகத்திடம் சென்று நான் பேசி வைத்திருந்த மாணவியை நீங்கள் எப்படி உங்கள் கல்லூரியில் சேர்க்கலாம் என தகராறு செய்தார். இதில் கேட்டரிங் கல்லூரி நிர்வாகம் மாணவி அன்னகாமுவை சரமாரியாக திட்டி அனுப்பியுள்ளனர்.

பின்னர் அவர் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல் மாணவி அன்னகாமுவை சரமாரியாக தாக்கினர். அப்போது மாணவிக்கு ஆதரவாக மற்றொரு கும்பல் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதில் மாணவி அன்னகாமுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இரு கோஷ்டியினர் பஸ் நிலையம் அருகே மோதிக்கொண்டதை பார்த்த சகபயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணவி அன்னகாமு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook