உடலில் தானாக தீப்பிடிக்கும் குழந்தை நாளை டிஸ்சார்ஜ்

உடலில் தானாக தீப்பிடிக்கும் குழந்தை நாளை டிஸ்சார்ஜ்

கீழ்ப்பாக்கம் : உடலில் தானாக தீப்பிடித்த குழந்தை ராகுல் குணமாகி விட்டான். நாளை  டிஸ்சார்ஜ் செய்யப்படுவான் என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணன், குழந்தைகள் நலத்துறை தலைமை டாக்டர் நாராயணபாபு கூறினர். விழுப்புரம் மாவட்டம் டி.பரங்கனி கிராமத்தை சேர்ந்த கருணா, ராஜேஸ்வரி தம்பதியின் இரண்டரை மாத ஆண் குழந்தை ராகுல் உடலில் தானாக தீப்பிடித்தது. சிகிச்சைக்காக கடந்த 8ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான்.

குழந்தைகள் நலத்துறை தலைமை டாக்டர் நாராயணபாபு, பேராசிரியர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்த காரணத்தை அறிய ரத்தம், சிறுநீர், வியர்வை, தோல் ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவில் குழந்தை ராகுலுக்கு எந்த குறைபாடும் இல்லை என்று தெரியவந்தது.

இதுபற்றி டீன் ராமகிருஷ்ணன், டாக்டர் நாராயணபாபு ஆகியோர் கூறியது:  குழந்தை ராகுலுக்கு இதுவரை 31 மாதிரியான சோதனை நடத்தி உள்ளோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிய வந்துள்ளது. குழந்தையின் சொந்த ஊரில் வைத்துதான் 4 முறை தானாக தீப்பிடித்ததாக கூறினர். மருத்துவமனையில் சேர்த்து 15 நாள் ஆகியும் தீ பிடிக்கவில்லை. தற்போது குழந்தை நன்றாக குணமாகி விட்டதால், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படும். தானாக தீப்பிடித்ததற்கான காரணத்தை மருத்துவ ஆய்வுகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. பில்லி, சூனியம், ஏவல் காரணமா? என்பது மருத்துவ ஆய்வுக்கு உட்பட்டது அல்ல.

ராகுலின் தாய் ராஜேஸ்வரி, தந்தை கருணா, பாட்டிகள் துளசி, பொன்னம்மாள் ஆகியோரை அழைத்து, குழந்தையை எப்படி பாதுகாக்க வேண்டும்? என்று மனநலத்துறை பேராசிரியர் ராஜரத்தினம் ஆலோசனை கூறி உள்ளார். நாங்களும் ஆலோசனை கூறி உள்ளோம். டிஸ்சார்ஜ் செய்த பிறகு மாதம் ஒரு முறை பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வர வேண்டும் என்றோம். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் வாரம் ஒரு முறை கிராமத்துக்கு சென்று குழந்தையை கண்காணிக்க வேண்டும் என்று தகவல் கொடுத்து இருக்கிறோம் என்றனர்.

வீடு தீப்பிடித்து எரிந்ததால் இலவசமாக வீடு கட்டி தர வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சர் வீரமணியிடம் குழந்தையின் தந்தை கருணா மனு கொடுத்தார். அதை பரிசீலித்த அமைச்சர், உடனே வீடு கட்டி கொடுக்க விழுப்புரம் கலெக்டர் சம்பத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook